
என் வாழ்கை ஓட்டத்தின் நினைவு குதிரையின் கடிவாளத்தை பிடித்து நிறுத்தி சற்று இளைப்பாற விட்டுவிட்டு , பின்னோக்கி செல்கிறேன் முடிந்த வரை ஓட்டத்தின் துவக்க இடத்தை நோக்கி . மங்கலாய் தெரிகிறது .....இரண்டு வயது குழந்தையாய் ஏதும் புரியாமல் வீட்டு தாழ்வாரத்தில் கருப்பேரி கிடந்த முட்டுகொம்பை மிக ஜாக்ரதையாக செதில்கள் ஏதும் பிஞ்சு கைகளில் குத்தாமல் இருக்க பக்கத்தில் தொங்கிகொண்டிருந்த அப்பாவின் பழைய வேட்டியை அதன்மேல் படரவிட்டு இருக்கமாய் பிடித்துகொண்டிருக்கிறேன் இருகைகளாலும் பயம் கலந்த முகத்துடன் , இத்தனை பேரும் ஒன்று கூடி ஏன்என்னைவிட அதிகமாய் அழுகிறார்கள் என்று புரியாமல் . அத்தனை கூட்டத்திலும் அம்மா மட்டும் தெரிந்தால் , அவர் அழுவதை பார்த்து நான் அமைதியாக இருந்தேன் தினமும்போல் இல்லாமல் . மெல்ல மெல்ல தெரியவருகிறது என் தாத்தா இறந்துவிட்டாராம் . இதுதான் என் நினைவு ஓட்டத்தின் ஆரம்பாம் இதற்க்கு முன்னால் கருவறையிலிருந்து தாத்தா இறந்த தினம் வரை ஏதும் ஞாபகம் இல்லை . கருவறையில் இருந்த நாட்களின் ஞாபகம் வராமல் இருப்பதாலோ என்னவோ பலர் அம்மாவை தெய்வமாக நினைப்பதே இல்லை.
